குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் தினமும் தரிசனத்துக்கு வர உள்ளனர். இதையொட்டி, பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது: பம்பையில் புதிதாக 10 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம். பம்பை ஹில்டாப், சக்கு பாலத்தில் சிறிய வாகனங்களுக்கான நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் வரை 56 இடங்களில் பக்தர்களுக்கு சுக்கு நீர் விநியோகிக்கப்படும்.மொத்தம் 41 நாட்கள் மண்டல கால வழிபாடுகள் நடைபெறும்.
தரிசன வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், மூலிகை குடிநீர் வழங்கவும், அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களின் உடல்வலி உபாதையை சரி செய்ய 24 மணி நேர பிசியோதெரபி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் முழுமை அடைந்துள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை செல்லும் முக்கிய வனப் பாதையான சத்திரத்தில் இடுக்கி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஷைஜு பி.ஜேக்கப் தலைமையில் சிறப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் யூனுஸ், மாவட்ட துணை மருத்துவ அதிகாரி ஜோபின் ஜி.ஜோசப், சுகாதாரத் துறை அதிகாரி ஷரத் ஜி.ராஜ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.