ஆன்மிகம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவில், தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் வந்து காட்சி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8:30 மணி அளவில் மூலவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி காலை 11.12 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, வணிக வைசியா சங்கத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், 11-ம் நாளான 14-ம் தேதி பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

அன்றிரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 12-ம் நாளான 15-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் (பொறுப்பு) மு.வள்ளிநாயகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT