மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். ஐப்பசி கடைசி நாள் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி வைபவத்தை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை கோயில்களில் துலா உற்சவ திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
மாயூரநாதர் கோயிலில் ரிஷப கொடி கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து, கோயில் கொடி மரத்துக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளியதும், திருவாவடுதுறை ஆதீன கட்டளை சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
தொடர்ந்து கோயிலின் நான்கு பிரகாரங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல, வதானேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர், மார்க்கெட் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.