பழநி: குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
முருகன் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால், பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலே மூன்றாம் படை வீடாகும். குழந்தை முருகனை மகாலட்சுமி (திரு),கோமாதா (ஆ), சூரியன் (இனன்), பூமாதேவி (கு),அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் குழந்தை வடிவில் மயில் மீது ஆமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
முருகன் குழந்தை வடிவில் இருப்பதால் இவருடன் வள்ளி,தெய்வானை இல்லை. பழநி வரும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோயிலில் வழிபட்ட பிறகே, மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கோயிலில் கடந்த 2014 செப்.7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிச.8-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூன் 16-ம் தேதி பாலாலய பூஜையுடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.1 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை (நவ.5) காலை நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு யாகம், வழிபாடுகளை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், நகராட்சி துணை தலைவர் கந்தசாமி, கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.