தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். விழாவையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு ஆகியோரிடம் காப்பு கட்டிய சோமாஸ் கந்தர் பட்டர் தாம்பூலம் பெற்று, யாகசாலை பூஜையை தொடங்கினார். பின்னர், விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றன.
மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார்.
அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி திருவாவடுதுறை ஆதின கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமியும் அம்மனும் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து கோயில் கிரி பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். பெண்கள் கிரி பிரகாரத்தில் அடிப் பிரதட்சணம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.