ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடங்கி அக்.28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.

பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இவர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்தபின் தேன், சர்க்கரை கலந்த தினை மாவும், மாலையில் எலுமிச்சம் பழச்சாறு, இரவு பால் இலவசமாக வழங்கப்பட்டது.

தினமும் இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து அருள் பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11, மாலை 5 மணியளவில் சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

முக்கிய விழாக்களான அக்.26-ல் சக்திவேல் வாங்குதல், 27-ல் சூரசம்ஹாரம், 28-ல் காலை சட்டத் தேரில் எழுந்தருளல், அன்று மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

SCROLL FOR NEXT