பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்கியது. அக்.27-ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை இன்று (அக்.22) பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர், விநாயகர், சண்முகர், மயில், துவார பாலகருக்கு காப்பு கட்டப்பட்டது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, யானை கஸ்தூரி, யானை பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்று, சூரசம்ஹாரம் வரை மலைக்கோயிலில் தங்கியிருக்கும். வயது முதிர்வு காரணமாக, நடப்பாண்டில் யானை கஸ்தூரி மலைக்கோயிலுக்கு செல்லவில்லை.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27-ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
மாலை 3 மணிக்கு சின்னக் குமார சுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும். தொடர்ந்து, திரு ஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல், வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற உள்ளது.
இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று சம்ப்ரோட்சணம் பூஜை நடைபெறும். விழா நிறைவாக அக்.28-ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 7 மணிக்கு மேல் பெரிய நாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.