ஆன்மிகம்

கேதார கெளரி விரதம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வீடு, கோயில்களில் மக்கள் வழிபாடு!

வேட்டையன்

சென்னை: ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நோன்பு எடுக்கும் வழக்கம் கொண்ட மக்கள், கேதார கெளரி விரத நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்நாளில், மக்கள் வீடு மற்றும் கோயில்களில் நோன்பு எடுப்பார்கள்.

தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட கனிகள், வெற்றிலை பாக்கு, பூ, நோன்பு கயிறு உள்ளிட்டவற்றை வைத்து தெய்வத்தை வழிபட்டு பின்னர் நோன்பு கயிறை கைகளில் கட்டிக் கொள்வார்கள். கேதார கெளரி விரதத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோயில்கள் அதிகாலை முதலே திறந்துள்ளன. மக்களும் கோயில்களில் நோன்பு எடுத்து வருகின்றனர்.

இன்று (அக்.21) மாலை 5.46 வரை அமாவாசை திதி இருப்பதனால் அது வரை மக்கள் நோன்பு எடுக்கலாம் என புதுச்சேரியை சேர்ந்த அர்ச்சகர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். ராகு காலம் (பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை), எமகண்டத்தை (காலை 9 மணி முதல் 10.30 மணி வரை) தவிர்த்து மக்கள் நோன்பு எடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

கேதார கெளரி விரதம்: கேதார கெளரி நோன்பு கொண்ட அற்புதமான நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கேதாரம் என்றால் வயல். கௌரியாகிய பார்வதி வயல்வெளியில் தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் கேதார கௌரி விரதம் எனப்படுகிறது. மனதில் வயல் போன்ற பசுமையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு இறைவனை மனப்பூர்வமாக வணங்கினாலே போதும். பூஜையறையில் விளக்கேற்றி சிவபெருமான் குறித்த பாடல்களைப் பாடி ஆராதனை செய்யலாம். அதேபோல், சிவபார்வதி படத்துக்கு முன்னால் அமர்ந்து அமைதியாக தியானிக்க வேண்டும்.

கேதார கௌரி விரதத்துக்கெனத் தனியாகப் பாயசம் அல்லது அப்பம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என நைவேத்தியம் செய்து வணங்கி வழிபடலாம். அம்பாள் துதியைப் பாராயணம் செய்யலாம். சிவ மந்திரங்களைச் சொல்ல வேண்டும். இதனால், சிவனாரின் அருளையும் உமையவளின் அருளையும் பெறலாம். ருத்ரம் ஜபித்து பாராயணம் செய்யலாம். முக்கியமாக ஓம் நமசிவாய, சிவாய நம ஓம் என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அன்றைய தினம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

சிவ பார்வதியை வணங்குவதும் பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பசுவுக்கு உணவிட்டு, யாரேனும் ஒருவருக்கு புத்தாடைகள் வழங்கி நமஸ்கரித்தால், பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்று சேருவார்கள். சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதி, கருத்தொருமித்த தம்பதியாக, ஆதர்ஷ தம்பதியாக, இணையற்ற தம்பதியாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT