தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
அன்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், சுவாமி, அம்மனுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோயில் சேர்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா தீபாராதனை நடைபெறும்.
வரும் 28-ம் தேதி அதிகாலை தெய்வானை அம்மன் கோயிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 6 மணியளவில் அம்மனுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.