சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் தீபாவளிக்கு முன்னதாக தரிசனத்தை முடித்து பண்டிகைக்கு வீடு திரும்புவதிலும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நேற்று சபரிமலையில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. நிலக்கல், பம்பை, நடைப்பந்தல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. மேலும் மழையும் பெய்து கொண்டே இருந்ததால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
பொதுவாக மாதாந்திர வழிபாட்டு காலங்களில் பக்தர்களின் வருகை இந்தளவுக்கு இருக்காது. ஆனால் இம்முறை கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், சபரிமலையில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் சிக்கல் ஏற்பட்டது. பக்தர்களின் வருகையை முறைப்படுத்தி உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.