ஆன்மிகம்

சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு

செய்திப்பிரிவு

தேனி: சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜைகளையும் தந்திரி தலைமையில், தலைமை அர்ச்சகர்கள் எனும் மேல்சாந்திகள் மேற்கொள்வது வழக்கம். இவர்களது பணிக் காலம் ஓராண்டு. சபரிமலையைப் பொருத்தவரை, ஐயப்பன் கோயில் மற்றும் அதன் அருகே உள்ள மஞ்சள்மாதா எனப்படும் மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கென என இரண்டு மேல்சாந்திகள் உள்ளனர்.

தற்போதைய மேல்சாந்திகளின் பணிக்காலம் முடிவடைந்ததால், புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது. ஐயப்பன் கோயிலுக்கு 14 பேரும், மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கு 13 பேரும் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பெயர்களை எழுதி, வெள்ளிக்குடத்தில் போட்டனர். பின்னர், பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இருவர் குடவோலை முறையில் மேல்சாந்திகளை தேர்வு செய்தனர்.

ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரியும், மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் மண்டல பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதுமுதல் ஓராண்டு காலம் இவர்கள் சபரிமலையிலேயே தங்கி வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

SCROLL FOR NEXT