ஆன்மிகம்

சமபந்தி போஜனம் செய்த விநாயகர்- விநாயகர் சதுர்த்தி ஆவணி 13 (ஆகஸ்ட் 29)

என்.ராஜேஸ்வரி

சின்ச்வாட் என்றொரு கிராமத்தில் சிந்தமான் தேவ் என்ற ஒருவர் இருந்தார். இவர் கிராமத்தில் வதந்தி ஒன்று பரவியது. பக்த துக்காராம் கொடுக்கும் உணவை பாண்டுரங்கன் உண்பதாகக் கேள்விப்படுகிறார். இதனைப் பரீட்சித்துப் பார்த்துவிட வேண்டும் என்று விரும்புகிறார் சிந்தமான் தேவ்.

சிந்தமான் தேவிடமிருந்து உணவருந்த வருமாறு துக்காராமுக்கு அழைப்பு வருகிறது. இந்த அழைப்பின் பொருளை முன்னரே தனது சிந்தையில் அறிந்த துக்கா சின்ச்வாட் கிளம்பச் சித்தமாகிறார். விட்டல், விட்டல் என்று சொல்லிய வண்ணம் சின்ச்வாட் வந்துவிட்டார் துக்காராம்.

அழகிய வீடான சிந்தமான் இல்லத்தின் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தார் துக்காராம். சிந்தமான், இவர் வரவை இவ்வளவு சீக்கிரம் எதிர்பாராததால், காலை பூஜைக்குப் பின் தியானத்தில் அமர்ந்தார். கண்களை மூடித் தியானம் செய்யும் வழக்கம் கொண்ட சிந்தமான் தன் தோட்டத்தை நினைத்துப் பார்க்கிறார்.

அதில் தான் முன்னர் கண்ட மலர்களை எண்ணிப் பார்க்கிறார். அவை சிறிது வாடியது போலத் தெரிகிறது. குப்பையும், கூளமுமாக இருக்கும் தோட்டத்தைச் சுத்தம் செய்யச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியே தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்துக் கண்களைத் திறந்த அவர், இறைவனை வணங்கிவிட்டு, இல்லத்தின் தாழ்வாரத்திற்கு வந்தார். அங்கே துக்காராமைக் காண்கிறார். `அடடே எப்போது வந்தீர்கள்? நான் கவனிக்கவில்லையே’என்றபடியே அவர் வர, துக்காராம் சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து நமஸ்கரிக்கிறார்.

துக்கா எப்பொழுதும் பக்தர்களை வணங்குபவர். பணக்காரர்களை அல்ல. கீழ் சாதிக்காரரான துக்காவை தாம் எப்படி விழுந்து வணங்குவது என்று தயங்கிய சிந்தமான் மீண்டும் `எப்போது வந்தீர்கள்?’ என்று மன்னிக்கும் தொனியில் கேட்டாரே ஒழிய நமஸ்கரிக்கவில்லை.

`தாங்கள் தோட்டத்தில் உள்ள மலர்களைப் பற்றி தியானிக்கும்போது வந்தேன்’ என்கிறார் துக்கா. சிந்தமானுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. `இவர் என்ன, மனதில் நினைப்பதைக்கூட அறிந்துவிடுகிறாரே’ என்று நினைத்தபடியே, `இதெல்லாம் சித்துவேலை என்று நிரூபணமானால் இவரைத் தண்டிக்காமல் விடமாட்டேன்’ என்று மனத்துக்குள் உறுதி எடுத்துக் கொள்கிறார்.

உணவு பரிமாறும் வேளை வந்தது. துக்கா, பாண்டுரங்கனுக்கு உணவளிப்பதைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் சிந்தமான் இருந்தார். பந்தியில் இருந்து ஒரு ஆறு அடி தள்ளி அமர்ந்து இருந்த துக்கா, தட்டு வைத்துக்கொண்டு போனவனிடம் மேலும் இரண்டு தட்டுக்கள் கேட்டார். சிந்தமான் தயக்கத்துடன், `வேறு எவரேனும் வந்திருந்தால் அவர்களும் இங்கு நம்முடனேயே சாப்பிடலாம். அழைத்து வாருங்கள்’ என்றார்.

துக்காவோ, `இது கணேசருக்கும் விட்டலனுக்கும் ஆனது. அவர்களும் நம்முடன் உணவருந்தப் போகிறார்கள்’ என்றார். பந்தியில் முதலில் கணேசருக்கும் அடுத்ததாக விட்டலனான ரகுமாயிபதிக்கும் தட்டுக்களை வைத்த துக்கா, மூன்றாவதாக தன் எதிரே ஒரு தட்டை வைத்துக்கொண்டார். இதனைக் கவனித்த சிந்தமான், மெளனமாகச் சாப்பிடத் தயாரானார்.

முதலில் காயத்ரி மந்திரம் சொல்லி, கணேசருக்கு அர்ப்பணம் பண்ண முயற்சித்தார் சிந்தமான். உடனே துக்கா கேட்டார். ` யாருக்காக இந்த அர்ப்பணம் செய்தீர்கள்? கணேசருக்கென்றால், தற்போது அவனது பக்தன் ஒருவன் கடலில் மூழ்கிவிட்டான். அவரைக் காப்பாற்ற இப்போதுதான் கடலுக்குள் குதித்து உள்ளார். தாங்கள் கொஞ்சம் பொறுங்கள்’ என்றார்.

பத்தே நிமிடத்தில் மஞ்சள் ஆடை அணிந்து கணேசர் வருவதை அறிகிறார் துக்கா. அவரது ஆடையில் இருந்து கடல் நீர் சொட்டுவதைச் சுட்டிக்காட்டுகிறார். பின்னர், `தாங்கள் இப்போது கணேசரையும் விட்டலனையும் அழையுங்கள். அதனால் நான் மிகுந்த திருப்தி அடைவேன்’ என்றார் துக்கா.

இந்த உயர்ந்த நிலையைப் புரிந்து கொள்ள இயலாமல், `சிலைக்கு நிவேதனம் வேண்டுமானால் செய்யலாம். சிலை, தானே இங்கு வந்து எப்படி உண்ணும்?’ என்ற தன் சந்தேகத்தைத் துக்காவிடம் வெளிப்படையாகக் கேட்கிறார் சிந்தமான்.

`இவ்வளவு பூஜைகள் செய்து, கணேசரை உம்மால் சாப்பிட வைக்க இயலாவிட்டால் இந்த பூஜைகளின் பயன்தான் என்ன? நாம் வழிபடும் தெய்வம் வந்து தரிசனம் தரவில்லையென்றால், நாம் செய்த பூஜை உபயோகமற்ற செயல் அல்லவா?’ என்று சொல்கிறார்.

இதனைக் கேட்ட சிந்தமான், தனக்கு அதற்கான சக்தி இல்லை என்றும் துக்காவே கணேசரை அழைத்து உணவு உண்ணச் செய்ய வேண்டும் என்றும் மனமுருகி வேண்டுகிறார். உடனே துக்காவும் மிகுந்த அன்பு நிறைந்த அபங்கத்தைப் பாடி, கணேசரை அழைக்கிறார்.

‘ஆராதனைக்குரிய மோரேசுவரா, வித்யா தயா சாகரா, ஆரம்பத்திலேயே வேண்டுகிறேன். அஞ்ஞானத்தைப் போக்கி புத்திமதி தந்தருள்வாயாக’ என்று பொருள்தரும் அபங்கத்தைப் பாடுகிறார்.

இதனைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த கணேசரும் சாப்பிடத் தயாராக வைத்திருந்த தட்டின் முன் அமர்கிறார். இதனைத் தன் புறக்கண்களால் கண்ட சிந்தமான், கணேசருக்கு சாஷ்டமாங்கமாய் நமஸ்காரம் செய்கிறார்.

பின்னர் துக்காவைப் பார்த்து விட்டலனையும் அழைக்க வேண்டும் என்று வேண்டி நிற்க, துக்காவின் அன்பு அழைப்பினை ஏற்ற பாண்டுரங்கன் மற்றொரு தட்டின் முன் அமர, அவருக்கும் சிந்தமான் நமஸ்கரிக்கிறார். பந்தியில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு, இரு தெய்வங்களும் அமர்ந்திருந்தது கண்ணுக்குப் புலப்படவில்லை. இந்நிலையில் உணவு பரிமாறப்பட்டது.

தெய்வங்களும், மனிதர்களும் இணைந்து அமர்ந்து உண்ட இந்த சமபந்தி போஜனம் இனிதே நிகழ்ந்தேறியது.

ஓர் உண்மையான விஷ்ணு பக்தனைக் கீழ் சாதி என்று ஒதுக்குவது மகாபாவம் என்று எண்ணிய சிந்தமான், துக்காவை நிற்க வைத்து நமஸ்கரித்தார்.

SCROLL FOR NEXT