சென்னை: திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திரமகா தேசிகன் நினைவாக ஆண்டு தோறும், உற்சவ விழா கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகன் உற்சவம் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு உற்சவத்தில் புதிதாக திருத்தேர் ஏற்பாடு செய்யப்பட்டு முதல்முறையாக தேரோட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், அஹோபில மடத்தின் 46-வது பட்டத்து அழகிய சிங்கர் ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
இந்நிலையில், ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகனின் குருவான சுவாமி தேசிகனின் அவதாரத் திருநாளையொட்டி, திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் உற்சவம் அக்.2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, தினசரி காலையில் பல்லக்கு சேவையும், மாலையில் கேடயம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர பிரபை, ஹம்ச வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு திருத்தேரில் சுவாமி தேசிகன் எழுந்தருளினார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமி தேசிகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
2 மணி நேரத்துக்கு பிறகு தேர் நிலையை வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து மாலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மங்களாஸாசனமும், மங்களகிரியும் நடைபெறுகிறது. அக்.14-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.