திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கற்பகவிருட்ச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மலையப்பர். 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம் 4-ம் நாள் விழா: கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி

செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபால வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதையடுத்து தங்க கொடிமரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெகு விமரிசையாக தொடங்கிய பிரம்மோற்சவத்தில் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, திருமலையில் உள்ள வாகன மண்டபத்தில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராஜமன்னார் அலங்காரத்தில் இருந்த மலையப்பரை பெருந்திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

4 மாட வீதிகளில் நடைபெற்ற இந்த வாகன சேவையில், காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்டங்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்களும் பங்கேற்றனர். வாகனங்களிலேயே அதிக பாரம் கொண்ட சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் மலையப்பர் நேற்றிரவு எழுந்தருளினார். குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

SCROLL FOR NEXT