ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் | படங்கள்: எல்.பாலச்சந்தர் 
ஆன்மிகம்

மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மகாளயம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இந்த அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைப்பர். முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளை நிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசைக்காக சனிக்கிழமை இரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.

அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடி, நான்கு ரத வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

பகல் 12 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். இன்று இரவு ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவிற்கான காப்புக்கட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பாக மகாளாய அமாவாசையையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் ராமேசுவரத்தில் பல்வேறு சத்திரங்களில் சிறப்பு அன்ன தானமும் நடைபெற்றது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT