ஆன்மிகம்

தீராத நோய் தீர்க்கும் பரிதிநியமம் பாஸ்கரேஸ்வரர் | ஞாயிறு தரிசனம் 

முனைவர் கே.பி.வித்யாதரன்

மூலவர்: பரிதியப்பர் அம்பாள்: மங்களாம்பிகை தல வரலாறு: பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்டி கடும் தவம் இருந்தார், இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவரது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்துக்கு இன்னொரு வரலாறும் உண்டு. சூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி (ராமபிரானின் முன்னோர்), வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டார் அப்போது இந்த இடத்துக்கு வந்ததும் சற்று இளைப்பாறினான். குதிரை சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் சிவலிங்கத்தில் வடு உள்ளது. அதே இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரியகுல மன்னனால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

தலபெருமை: தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகின்றனர். சிவன் எதிரில் சூரியன் நின்று சிவதரிசனம் செய்யும் கோலத்தை வேறு எங்கும் காண இயலாது. சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இத்தலம் பிதுர்தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஜாதகரீதியாக எந்த கிரகத்தால் பிதுர்தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். அமைவிடம்: தஞ்சை - பட்டுக்கோட்டை செல்லும் வழியில் (15கிமீ) உளூரில் இறங்கி கிழக்கே 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12.30, மாலை 3.30-6.30 மணி வரை.

SCROLL FOR NEXT