காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் உற்சவத்தின் முதல்நாளில் தங்க சப்பரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
ஆன்மிகம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் - தொடங்கியது வைகாசி பிரம்மோற்சவம்

கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே அர்ச்சகர்கள் மூலம் கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, காலை 4:20 மணியிலிருந்து 6 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு வழிபாடுகளுக்கு அடுத்து வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், நகரில் உள்ள முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், நாளை 13ம் தேதி கருடசேவை உற்சவமும், வரும் 17ம் தேதி பிரசித்திப் பெற்ற திருத்தேரோட்ட உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT