ஆன்மிகம்

இழந்த பதவி, சொத்துகளை மீட்டளிக்கும் ஆதலையூர் பீமேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

செய்திப்பிரிவு

மூலவர்: பீமேஸ்வரர் அம்பாள்: ஆனந்தநாயகி தல வரலாறு: துரியோதனன், பாண்டவர்களுக்கு தன் தேசத்தில் பாதியை தரமறுத்தான். இதனால் மகாபாரத போர் தொடங்குவதற்குமுன்பு பாண்டவர்கள், தாங்கள் இழந்த தேசத்தையும் பதவியும் மீண்டும் பெற பலதலங்களுக்கு, சேர்ந்தும், தனித்தனியாகவும் சென்று வழிபட்டனர். அவர்களில் ஒருவனான பீமன், ஆதலையூர் வந்து,தாமரைக்குளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி, வெற்றி பெற வலிமை தர வேண்டினான். சிவபெருமான் பீமனுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். பிறகு பாண்டவர்கள் குருஷேத்திரப் போரில் வெற்றி பெற்று, இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டனர். பீமன் வழிபட்டதால் இவ்வூர் ஈசன், பீமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் சிறப்பு : சிவபெருமான் கயிலாயத்தில் உருமாற்றி விளையாடும் திருவிளையாடலைத் தொடங்கினார். வில்வமரம், கங்கை என்று உருமாறி இருந்தாலும், பார்வதி தேவி அவரை கண்டுபிடித்தாள். இதையடுத்து சிவபெருமான் பூலோகம் சென்று பசுவாக உருமாறினார். முரட்டுப் பசு யாருக்கும் அடங்காமல் பலருக்கு இன்னல்கள் விளைவித்ததால், அதை ஊர் மக்கள் கட்டி வைத்தனர். சிவபெருமானைத் தேடிஅங்கு வந்த பார்வதி தேவி, பசுமாட்டைக் கண்டு மனமிரங்கி,அதை அவிழ்த்துவிட்டாள். பசுவாக உருமாறிய சிவபெருமான் தன் சுய உருவத்தைக் காட்டினார். இதில் ஆனந்தம் அடைந்த பார்வதி தேவி, ஆனந்தநாயகி என்ற பெயர் பெற்றாள். இத்தலத்திலேயே சிவபெருமான் தங்கி அருள்பாலிக்க வேண்டும் என்றுஊர் மக்கள் வேண்டினர். ஆ என்றால் பசு. தளை என்றால் கட்டுதல். பசுவை கட்டிப் போட்டதால், இவ்வூர் ஆதளையூர் (ஆதலையூர்) என்று அழைக்கப்பட்டது.

பிரார்த்தனை: பதவியையும் சொத்துகளையும் இழந்தவர்கள் பீமேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அவை மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: குடந்தை - நாகை சாலையில் 32 கிமீ தொலைவில் உள்ள ஆதலையூரில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது கோயில். கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6-10, மாலை 4.30-8 வரை.

SCROLL FOR NEXT