பழநியில் நேற்று வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. படம்: நா.தங்கரத்தினம் 
ஆன்மிகம்

பங்குனி உத்திர திருவிழா: பழநியில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

செய்திப்பிரிவு

பழநி: வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு பழநியில் நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி கிரிவீதிகளில் பல்வேறு வாகனங்களில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவு 9 மணியளவில் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி, கிரிவீதிகளில் வலம் வந்தார்.

நிகழ்ச்சியில், அறநிலையத் துறை துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர்கள் பாலசுப்பிரமணி, அன்னபூரணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், பிற்பகல் ஒரு மணிக்குமேல் தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT