ஆன்மிகம்

கன்னியம்மன் மாசிமகம் பாரம்பரிய வழிபாட்டுக்காக மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள்!

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் மக்கள், பாரம்பரிய முறையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும் குடவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகம் நாளான்று இருளர் இன மக்கள் கடற்கரையில் ஒன்றுக்கூடி குடில்கள் அமைத்து மூன்று நாட்கள் தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை காண்பதற்காகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.

இந்நிலையில், மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்ப்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர். மேலும், அதிகாலை கடற்கறையில் மணலில் ஏழு படிகள் கொண்ட கோயில் அமைத்தும் மற்றும் மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வழிபட்டனர்.

குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதற்காக கன்னியம்மனிடம் அருள்வாக்கு பெற்று நிச்சயம் செய்தனர். இவர்களுக்கு அடுத்த ஆண்டு மாசிமக நாளில் கடற்கரையில் திருமணம் நடைபெறும். கடந்த ஆண்டு இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு கன்னியம்மன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

மேற்கண்ட பாரம்பரிய வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இருளர் மக்கள் குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டிருந்ததால், கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சார்பில், தற்காலிக கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரை பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும், பல்வேறு பழங்குடியின இருளர் மக்களுக்கான அமைப்புகள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

SCROLL FOR NEXT