திருப்புறம்பியத்தில் நேற்று நடைபெற்ற கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி கோயில் தேரோட்டத்தின்போது, கொட்டும் மழையிலும் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள். 
ஆன்மிகம்

கும்பகோணத்தில் 6 கோயில்களின் தேரோட்டம்: இன்று மகா மக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

செய்திப்பிரிவு

மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 6 கோயில்களின் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை மாசி மக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு மாசி மக விழாவையொட்டி, கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் மற்றும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி ஆகிய 6 சிவன் கோயில்களில் கடந்த 3-ம் தேதியும், சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய 3 பெருமாள் கோயில்களில் 4-ம் தேதியும் கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று காலை ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீஸ்வரர், திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ஆகிய கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. சாட்சிநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காசி விசாலாட்சி அம்மன் உடனாய காசி விஸ்வநாதர், அமிர்தவள்ளி உடனாய அபிமுகேஸ்வரர், சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் ஆகிய 3 கோயில்களின் தேரோட்டம் நேற்று மாலை மகாமக குளத்தைச் சுற்றி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாது வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதேபோல, சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர் கோயில் தேர், கோயிலை சுற்றி வலம் வந்தது.

இன்று (மார்ச் 12) காலை காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள் மற்றும் அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன், கோயிலில் இருந்து வீதியுலாவாக புறப்பட்டு, மகாமக குளக்கரையை வந்தடைவார்கள். பின்னர், குளத்தில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள். பிற்பகல் 3 மணிக்கு திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலில் தீர்த்தவாரி நடைபெறும்.

முன்னதாக, சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டம் நடைபெறும். பொற்றாமரை குளத்தில் ஸ்ரீதேவி-பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் எழுந்தருள, தெப்போற்சவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகள் அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் செய்து வருகின்றனர். முதன்மை கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஆதிகம்பட்டவிஸ்வநாதர் கோயில்களில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய திருப்பணி செய்யப்பட்டுள்ளதால், அந்த கோயில்களில் இந்த ஆண்டு மாசிமக விழா நடைபெறவில்லை.

SCROLL FOR NEXT