புதுச்சேரி: ஆரோவில் உதய தினத்தையொட்டி மாத்ரி மந்திரில் ஃபோன் பயர் ஏற்றி கூட்டு தியானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில், மனிதகுல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்ட ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. உலகில் மனித இன ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன்முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துகளில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை, கடந்த 1965-ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
1966-ம் ஆண்டில், ஆரோவில் குறித்த திட்டம், யுனெஸ்கோ பொது சபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பு இந்த நகரம் எதிர்கால மனித சமுதாயத்திற்கு ஒரு முக்கியமானதாக அமையும் என பாராட்டி இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28-ம் தேதியன்று, ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆரோவில் உதய நாளில் கூட்டு தியானம் நடத்தப்படும்.
இதையொட்டி, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்ரி மந்திர் (அன்னையின் இல்லம்) அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் இன்று காலை 'போன் ஃபயர்' ஏற்றி, ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. ஆரோவில் வாசிகளும் வெளிநாட்டாவரும் ஆரோவில் உதய தினத்தை யொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.