குமரி மாவட்டம் முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து பன்னிரு சிவாலய ஓட்டத்தை கையில் விசிறியுடன் தொடங்கிய பக்தர்கள் 
ஆன்மிகம்

குமரி: வெயிலிலும் 110 கி.மீ. தூரம் ஓடியே சென்று சிவாலயங்களை தரிசிக்கும் பக்தர்கள்!

எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய சிறப்புமிக்க பன்னிரு சிவாலய ஓட்டம் இன்று (பிப்.25) துவங்கியது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் 110 கிலோ மீட்டர் தூரம் ஓடியே சென்று பக்தர்கள் சிவாலயங்களை தரிசித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த பன்னிரு சிவதலங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே பாம்பரியமாக இங்கு நடைபெற்று வருகிறது. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியாகும்.

சிவராத்திரிக்கு 7 நாட்களுக்கு முன்பு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தின் முந்தைய நாளில் வேகவைக்கும் உணவுகளை உண்ணாமல் நோன்பு இருப்பது வழக்கம். பச்சை காய்கறிகள், பழங்கள், பயிறு, இளநீர், நுங்கு போன்றவற்றையே உண்பர். சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதி பக்தர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு முந்தைய தினமான இன்று குமரி மாவட்டத்தில் பன்னிரு சிவாலயத்தின் முதல் கோயிலான முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்கியது. ராமாயணம், மகாபாரதம் காவியத்தோடு தொடர்புடைய திருமலை மகாதேவர் கோயிலில் சிவனை தரிசித்து, அங்கிருந்து இன்று காலை முதலே பக்தர்கள் ஓடத் துவங்கினார்கள். மதியத்தில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் முஞ்சிறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிவாலயம் ஓட்டத்தில் பங்கேற்ற காவி உடைதரித்த பக்தர்கள் விசிறி, விபூதி பொட்டலத்துடன், முஞ்சிறையிலிருந்து துவங்கி திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை கோயில், பொன்மைனை மகாதேவர் கோயில், பன்னிப்பாகம் கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு கோயில், திருவிடைக்கோடு சடையப்பர் கோயில், திருவிதாங்கோடு கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம்சங்கரநாராயணர் கோயில்போன்றவற்றை ஓடியே சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

சிவாலய ஓட்டம் நிறைவடையும் நட்டாலத்தில் நாளை (பிப்.26) இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்திருந்து சிவனை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.சுமார் 110 கிலோ மீட்டர் சுற்றளவு அமைந்துள்ள இந்தப் பன்னிரு சிவாலயங்களையும் ஓடி தரிசித்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொது மக்கள் சார்பில் சுக்கு நீர் ,கடலை, பானகம் ,மோர் ,கஞ்சி, பழம், இளநீர், நுங்கு போன்ற உணவு பானங்கள் வழங்கப்படுகிறது.
இது தவிர 12 சிவாலயங்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்று தரிசிப்பார்கள்.

இதனால் இன்று அதிகாலை முதல் முஞ்சிறை பகுதி வாகனங்களால் திணறியது. மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிவாலய ஓட்டம் மற்றும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளுர் விடுமுறையாகும். இதனால் நாளை பல்லாயிரக்கணக்கானோர் சிவாலய ஓட்டத்துடன் பின்தொடர்ந்து வாகனத்தில் சென்று சிவாலயங்களை வழிபட உள்ளனர்.

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இரு நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT