திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் தாடங்கங்கள் எனப்படும் காதணிகள் தூய்மை செய்து, மெருகூட்டி நேற்று அணிவிக்கப்பட்டன. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.
அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தோடுகளை குறிப்பிட்ட காலஇடைவெளியில் காஞ்சி மடம் சார்பில் தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு, மீண்டும் அணிவிப்பது வழக்கம். அதன்படி, அம்மனின் காதணிகள் மெருகூட்டி மீண்டும் நேற்று அணிவிக்கப்பட்டன.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவானைக்காவல் சங்கரமடத்தில் முகாமிட்டு, கோயில் நிர்வாகத்திடமிருந்து காதணிகளைப் பெற்று, அம்மன் சந்நிதி முன்பு யாகசாலை அமைத்து ஹோமங்கள், பூஜைகள் செய்து, மீண்டும் அணிவித்தார்.
இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் நேற்று முற்பகல் முதல் மதியம் வரை திருவானைக்காவல் காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சமுதாய காதணி விழாவில் பங்கேற்று, தங்கள் குழந்தைகளுக்கு காதணிகள் அணிவித்தனர். ஏற்கெனவே காதணி விழா நடத்தப்பட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் அருளாசியுடன் பொற்கொல்லர்கள் மூலம் காதணிகள் அணிந்துகொண்டனர். அவர்களுக்கு மடத்தின் சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.