சென்னை: சென்னையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற உள்ள பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் பங்கேற்பதற்காக அம்ருதானந்தமயி வருகை புரிந்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின்பு தனது தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு வந்துள்ள அம்ருதானந்தமயி தேவியை பாரம்பரிய பூர்ண கும்ப மரியாதைகளுடன் சுவாமி வினயாம்ருதானந்தபுரி சென்னை பக்தர்களின் சார்பில் வரவேற்றார். மாதா அம்ருதானந்தமயி தேவியுடன் ஆயிரக்கணக்கான துறவிச் சீடர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் ஆசிரமவாசிகள் சென்னை வந்துள்ளனர்.
இதனிடையே, விருகம்பாக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு அம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மஸ்தான ஆலயத்தின் 35-வது பிரம்மஸ்தான மஹோத்சவமானது நடைபெற உள்ளது. பிப்ரவரி 17-ம் தேதி, காலை 11:00 மணிக்கு அம்மாவின் வழிகாட்டுதலின்படி தியானம், அருளுரை மற்றும் பஜனைகள் இடம்பெற்ற உள்ளன.
தொடர்ந்து தன்னைக் காண வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தமது அன்பு கலந்த அரவணைப்பை மாதா அம்ருதானந்தமயி தேவி வழங்குவார். இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் சனி மற்றும் ராகு தோஷ நிராவண பூஜைகள் பிரம்மஸ்தான ஆலயத்தில் நடைபெற உள்ளன. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்குவது உட்பட பெரிய கூட்டத்திற்கு இடமளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து பிப்ரவரி 20-ம் தேதி மாலை 6 மணியளவில், கரூர் செம்மடையில் அமைந்துள்ள அம்ருதாவித்யாலயம் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெறவிருக்கும் பொது நிகழ்ச்சிக்கு அம்மா விஜயம் செய்கிறார். அங்கு அருளுரை, தியானம், பஜனை மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.