மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில்  மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர் - படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
ஆன்மிகம்

மதுரையில் தெப்பத் திருவிழா கோலாகலம் - மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர்

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 12-ம் நாளான இன்று (பிப்.11) வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தை மாத தெப்பத் திருவிழா ஜன.31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளிலும் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். பிப்.9-ம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான (பிப்.10) நேற்று மதுரை சிந்தாமணியில் நடைபெறும் கதிரறுப்பு திருவிழாவை முன்னிட்டு காலையில் தங்கப்பல்லக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகினர்.

அம்மன் சன்னதி தெரு, கீழமாசிவீதி, காமராஜர் சாலை, கீழவெளிவீதி வழியாக சிந்தாமணியிலுள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிரறுப்பு திருவிழாவில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மாலையில் புறப்பாடாகி கோயிலை சென்றடைந்தனர்.

முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழாவை முன்னிட் இன்று (பிப்.11) அதிகாலை 4.30 மணியளவில் கோயிலிலிருந்து வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து புறப்பாடாகினர்.

வழிநெடுகிலும் பல மண்டகப்படிகளில் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். தெப்பக்குளத்தைச் சூழ்ந்திருந்த பக்தர்கள் தெப்பத்தின் வடம் பிடித்து இழுத்தனர். தெப்பக்குளத்தை 2 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்பு முக்தீஸ்வரர் கோயிலுக்கு செல்கின்றனர். அதன்பின்னர் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்திஉலாத்தி தீபாராதனை நடைபெறும்.

பின்னர் இரவில் வெள்ளி அவுதா தொட்டிலில் மீனாட்சி அம்மனும், தங்கக்குதிரை வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மீண்டும் ஒருமுறை வலம் வருகின்றனர். பின்னர் தெப்ப உற்சவம் முடிந்து இன்றிரவே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு திரும்புவர். அதனையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சி தெப்பத் திருவிழா மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இன்று திருமலை நாயக்கர் ஜென்ம நட்சத்திரம். தெப்பக்குளத்தை கட்டுமானம் செய்த அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தெப்ப உற்சவத்தையும் ஏற்பாடு செய்தார். அதன்படி இன்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT