தைப்பூச திருவிழாவையொட்டி பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. படம்: நா. தங்கரத்தினம் 
ஆன்மிகம்

பழநியில் இன்று தைப்பூச தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். விழாவின் 6-ம் நாளான நேற்றிரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர்கள் சு.பாலசுப்பிரமணி, சி.அன்னபூரனி, ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், க.தனசேகர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தைப்பூசத்தன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, காலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியானில் சண்முகநதிக்கு எழுந்தருளல், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாலை 4.45 மணிக்கு மேல் ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக பிப்.14-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத் திருவிழாவும், இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

அவர்கள் கிரிவலம் வந்தும், பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பழநி மலைக்கோயிலில் நேற்று 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனைவரும் சமமாக பொது தரிசனத்தில் சுவாமி கும்பிட்டனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழநியில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக இன்றும், நாளையும் பழநியில் இருந்து வெளியூர்களுக்குச் சிறப்பு பேருந்துகளும், பழநி - மதுரை, மதுரை - பழநி இடையே சிறப்பு ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT