ஆன்மிகம்

தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு

ஆ.நல்லசிவன்

பழநி: தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு,மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

விழாவின் 6-ம் நாளான இன்று திங்கட்கிழமை (பிப்.10) இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், நாளை (பிப்.11) தைப்பூசத்தன்று மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதையொட்டி, வெளி மாவட்டம், வெளி மாநில பக்தர்கள் நள்ளிரவு முதலே கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். பழநியில் திரும்பிய பக்கமெல்லாம் பாத யாத்திரை பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர்.

இன்று (பிப்.10) முதல் 12-ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் சமமாக பொது தரிசனத்தில் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிஸ்கெட் பாக்கெட், தொன்னையில் பிரசாதம் வழங்கப்படுகிறது. தைப்பூசத்தையொட்டி, 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT