ரதசப்தமியையொட்டி திருமலையில் நேற்று ஒரே நாளில் 7 வாகனங்களில் உற்சவரான மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
ரத சப்தமி விழாவை ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்நாளில் உற்சவரான மலையப்பர் அதிகாலை முதல் இரவு வரை மொத்தம் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி தேவஸ்தானம் இவ்விழாவினை கடந்த 1564-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருவதாக கல்வெட்டுகள் மூலம் குறிப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை 5.30 மணிக்கு முதல் வாகனமாக தங்க சூரியபிரபையில் சூரிய நாராயணராக மலையப்பர் எழுந்தருளினார்.
மாட வீதிகளை வலம் வரும்போது மிகச்சரியாக காலை 6.48 மணிக்கு சூரிய கிரணங்கள் மலையப்பரின் பாதங்களில் விழுந்தன. அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள், `கோவிந்தா கோவிந்தா’ என பக்தி கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர்.
சூரியபிரபையை தொடர்ந்து சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமன் வாகன சேவைகள் நடந்தன. பின்னர் மதியம் கோயில் அருகே உள்ள குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தேறியது.
இதனைத் தொடர்ந்து கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாலவாகனம், சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாட வீதிகளில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், மோர், பால் போன்றவை விநியோகம் செய்யப்பட்டன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ரதசப்தமி விழா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி நகரில் உள்ள கோவிந்தராஜர் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்றது.