கோவை: கோவை மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் இன்று (ஜன.27) ஆய்வு செய்தனர்.
கோவை மருதமலை முருகன் கோயிலில், அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 160 அடி உயரத்தில் கல்லினால் ஆன முருகன் சிலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளனர். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மருதமலை முருகன் கோயிலில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று மாலை (ஜன.27) ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக ஆட்சியில் இதுவரை 2,400 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முதல்கட்டமாக 7 முருகன் கோயில்கள் பெருந்திட்ட வரைவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.400 கோடி மதிப்பிலும், பழநி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.99 கோடி மதிப்பிலும், திருத்தனி முருகன் கோயிலில் ரூ.183 கோடி மதிப்பிலும், மருதமலை முருகன் கோயிலில் ரூ.6.50 கோடி மதிப்பிலும், திருவள்ளூர் சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.16 கோடி மதிப்பிலும் பெருந்திட்ட வரைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் ரூ.30 கோடி மதிப்பிலும், உதகையின் காந்தல் பகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.16 கோடி மதிப்பிலும் பெருந்திட்ட வரைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 7 திருக்கோயில்களில் மட்டும் ரூ.872 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவுப் பணிகள் நடக்கின்றன. மருதமலை முருகன் கோயிலில் 2 அடுக்கு லிப்ட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும். மருதமலையில் 160 அடி உயரத்தில் கல்லினால் ஆன முருகன் சிலை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தகுந்த ஆலோசனை நிறுவனத்தினர் மூலம் சாத்தியக்கூறுகள் ஆய்வு இறுதி பெற்றவுடன் முதல்வர் அனுமதி பெற்று ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலை இங்கு நிறுவும் பணிகள் தொடங்கப்படும். பேரூர் கோயில் ஆக்கிரமிப்புகள் வரும் 31-ம் தேதி அகற்றப்படும். வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். அங்கு மருத்துவக் குழுக்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலை ஏறுபவர்களுக்கு போதிய உடல் பரிசோதனை செய்வதற்கு உண்டான சிறப்பு ஏற்பாடு மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை, மருத்துவத்துறை ஆகியோர் இணைந்து நடப்பாண்டு மேற்கொள்வர்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது. அன்னதானத்தை தடை செய்யும் நோக்கம் இந்த அரசுக்கு இல்லை. பக்தர்களுக்கு உதவுவதை இந்த அரசு ஏற்றுக் கொள்ளும். பேரூர் பட்டீசுவரர் கோயிலில் குடமுழுக்கு, அர்ச்சனை தமிழில் நடத்தப்படும்” என்று அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.