ஆன்மிகம்

மகா கும்பமேளாவில் அம்பாஸிடர் பாபா, கோடாரி பாபா

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளா வில் அம்பாஸிடர் பாபா, கோடாரி பாபா என வித்தியாசமான பாபாக்கள் இணைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் திரிவேணி சங்கமத்தின் கரையில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா துவங்கியது. இந்நிகழ்ச்சியில் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 13 அகாடாக்களை சேர்ந்த துறவிகள் முகாமிட்டுள்ளனர். அகாடாக்களின் உறுப்பினர்களாக உள்ள பாபாக்களில் பலர் வித்தியாசமானத் தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் கும்பமேளா வரும் பக்தர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

ஜுனா அகாடாவின் மஹந்த் ராஜ்கிரி, ‘அம்பாஸிடர் பாபா’ என்று அழைக்கப்படுகிறார். இவர் 1972-ம் ஆண்டு வாங்கிய அம்பாஸிடர் காரில் வந்துள்ளார். ஜூனா அகாடா முகாமில் அம்பாஸிடர் காரிலேயே தங்கி உள்ளார். தனது காரை காவி நிற வண்ணத்துக்கு மாற்றியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் இவரிடம் ஆசி பெற குவிகின்றனர்.

இதுகுறித்து அம்பாஸிடர் பாபா கூறும்போது. “இதுவே எனது அரண்மனை, வீடு, புஷ்பக விமானம். இதற்குள் துறவிகள், நாகா சாதுக்கள் மட்டுமே அமர அனுமதிப்பேன். வேறு யாராவது அமர்ந்தால் இந்த கார் நகராது. கன்னியாகுமரி சென்ற போது, படகில் காரை ஏற்றி அதில் அமர்ந்து சென்றேன்” என்கிறார்.

மற்றொருவர் மஹந்த் ஹரி ஓம் பாரதி. இவரை ‘கோடாரி பாபா’ என்று அழைக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துறவறம் ஏற்றது முதல் இவர் கையில் கோடாரி வைத்திருப்பதுதான் பெயர் காரணம். இந்த கோடாரியை தன்னுடன் 24 மணி நேரமும் வைத்துள்ளார். அதை கீழே வைக்க மாட்டார். கழுத்து பாரம் தாங்காத அளவுக்கு ஏராளமான ருத்ராட்ச மாலைகளை அணிந்திருக்கும் கோடாரி பாபா, குஜராத்தை சேர்ந்தவர். தன்னை இந்த நாட்டைக் காக்கும் போர் வீரனாகக் கருதுவதால் கோடாரியை வைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார். இவரது கோடாரியால் அவரிடம் நெருங்கி சென்று ஆசி பெற பொதுமக்கள் சற்று தயங்குகின்றனர்.

SCROLL FOR NEXT