சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாடுகள் முடிந்தநிலையில் நாளை வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை மறுநாள் கோயில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் உச்ச நிகழ்வாக கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலையில் பொன்னம்பலமேட்டில் தெரிந்த ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகர சங்கராந்தி வழிபாடுகள் நடைபெற்றன.
மகரவிளக்கு பூஜைகள் முடிந்த நிலையில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பையில் இருந்து மாலை 6 மணிக்குள் பக்தர்கள் மலையேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னோட்டமாக, சத்திரம், எருமேலி உள்ளிட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கான வனப்பாதைகள் மூடப்பட்டன. சபரிமலையில் இன்று (சனி) காலை 10.30 மணியுடன் நெய் அபிஷேகம் நிறைவடைகிறது.
இதற்கிடையே, சபரிமலை சந்நிதானத்துக்கு நேற்று முன்தினம் பந்தள மன்னரின் பிரதிநிதி ராஜராஜவர்மா உள்ளிட்டோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பந்தள மன்னரின் பிரதிநிதிகள் தற்போது சந்நிதானப் பகுதியில் தங்கி உள்ளனர்.
நாளை மறுநாள் (ஜன. 20) பந்தள மகாராஜ வம்சப் பிரதிநிதிகளின் தரிசனத்துக்காக காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். அவர்களின் தரிசனத்துக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு விபூதி அபிஷேகம் நடைபெறும். பின்னர் ஹரிவராசனப் பாடலுடன் நடை சாத்தப்படும்.
தொடர்ந்து, கோயில் சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். பிறகு திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெறும். மாதாந்திர பூஜைக்காக பிப். 12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.