திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற திருவூடல் - மறுவூடல் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்றார்.
சிவபெருமானை மட்டும் பிருங்கி மகரிஷி வணங்கியதால் பார்வதி சினம் கொண்டார். இதனால், சுவாமியுடன், அம்பாளுக்கு ஊடல் ஏற்படுகிறது. இதையொட்டி, திருவூடல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு திருவூடல் திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. சுவாமியுடன் ஊடல் அதிகமானதால் கோயிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள தனது சந்நிதிக்கு சென்ற அம்பாள், தாழிட்டுக் கொள்கிறார். சுவாமியும் குமரக் கோயிலுக்கு சென்றுவிடுகிறார். இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, நேற்று அதிகாலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் தொடங்கியது. 14 கி.மீ. தொலைவுக்கு கிரிவலம் சென்ற அண்ணாமலையாரை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்றனர். வழியெங்கும், சுவாமிக்கு மண்டகபடி மற்றும் கற்பூர தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். கிரிவலம் நிறைவு பெற்றதும், திட்டி வாசல் வழியாக சுவாமிகோயிலுக்குத் திரும்பினார். தொடர்ந்து, சுவாமிக்கும், அம்பாளுக்கும் மறுவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.