திருஉத்தரகோசமங்கையில் சந்தனக்காப்பு களையப்பட்ட நடராஜருக்கு நடைபெற்ற தீபராதனை 
ஆன்மிகம்

திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு களைந்து அபிஷேகம் - பக்தர்கள் பரவசம்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள பிரசித்திபெற்ற மரகத நடராஜர் சிலைக்கு சந்தனக்காப்பு களையப் பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் மரகத நடராஜர் எழுந்தருளி உள்ளார். 6 அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகதக் கல்லாலான நடராஜர் சிலை, விலை மதிப்பற்றது. ஒலி, ஒளியால் சிலைக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் மரகத நடராஜர் சிலைக்கு சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை,ஆருத்ரா தரிசன விழாவுக்கு முந்தைய நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப் பட்டு, அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக்காப்பு இல்லாமல் நடராஜர் காட்சி அளிப்பதால், மற்ற நடராஜர் கோயில்களைவிட இங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவைக் காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 05-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நாள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

விழாவின் முக்கிய நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் மகாராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் சார்பாக அவரது குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பாஞ்சலி பூஜைகள் செய்யப்பட்டு, திருநடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து திருவாசகம், சிவப்புராணம், வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, சந்தனம் மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு, பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், திருநீர், மூலிகை என 33 வகையான திரவியங்களால் மகாஅபிஷேகம் நடைபெற்றது. தீபராதனை செய்யப்பட்டது.

பிறகு மூலிகை திரவியங்கள் பூசப்பட்டு நிலையில் மரகத நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பஞ்சமூர்த்திகள் புறப்பாடு: இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தேவார இசை, பண்ணிசை, கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல், மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. நாளை (திங்கட்கிழமை) அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம், கூத்தர் பெருமான் திருவீதி உலா, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி தந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழா ஏற்பாடுகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங்காலோன், சமஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எஸ்.பி சந்தீஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (திங்கட்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்தும் சிறப்பு பேருந்துகள் நாளை (திங்கட்கிழமை) இரவு வரையிலும் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT