ஆன்மிகம்

சபரிமலையில் ஜன.14-ல் மகர விளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது திருவாபரணம்

என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலையில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து இன்று புறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு மாலை 6.25-க்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, பொன்னம்மபல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

இதையொட்டி, எருமேலியில் நேற்று அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றது. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து இன்று புறப்பட்டு, வரும் 14-ம் தேதி சந்நிதானத்தை வந்தடையும். இந்த ஊர்வலத்துக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்.

சந்நிதானம் வரும் திருவாபரணத்தை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பெற்றுக் கொள்வர். மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டவுடன், பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு அதிகாரிகள் செய்து வருகிறது.

மேலும், அட்டதோடு முதல் நீலிமலை வரையிலான பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. பம்பை நுணங்கானுக்கு இடையே தற்காலிக பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. நெரிசலைத் தவிர்க்க வரும் 13, 14-ம் தேதிகல் ஆன்லைன் மூலம் தலா 50 ஆயிரம் பக்தர்கள், ஸ்பாட் புக்கிங் மூலம் 1,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகரஜோதி நாளில் புல்மேட்டில் நெரிசல் ஏற்படும் என்பதால், இடுக்கி மாவட்டத்துடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐயப்ப சந்நிதானத்தில் இன்றும், நாளையும் சுத்திகிரியை பூஜை நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜையில் அணிவிக்கப்படும் திருவாபரணத்துடன் ஐயப்பனை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தரிசிக்கலாம். வரும் 19-ம் தேதி வரை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும் 20-ம் தேதி காலை 6.30 மணிக்கு பந்தள ராஜ குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்த பின்னர், கோயில் நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜை நிறைவடையும்.

SCROLL FOR NEXT