ஆன்மிகம்

கருணையுடன் ஈர்ப்பவன் கோவிந்தன்...! | மார்கழி மகா உற்சவம் 27

கே.சுந்தரராமன்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னைப் |
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; ||
நாடு புகழும் பரிசினால் நன்றாக, |
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே ||
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; |
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பால்சோறு ||
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் |
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 27)

பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா! உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும். கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களைத் தருவாயாக! நோன்பை நிறைவு செய்யும் வகையில், நாங்கள் அனைவரும் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும் என்று பெண்கள், கண்ணனை நோக்கிப் பாடுகின்றனர்.

ஈசனை சரண் புகுந்து மகிழ்வோம்...! - அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

(திருப்பள்ளியெழுச்சி 7)

உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய ஈசனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர், பழத்தின் இனிமை பெற்றது. பால் போல் சுவை மிகுந்தது. தேவர்களுக்கே காட்சி அருளாத நீ, இதுதான் என் நிஜ வடிவம் என்று எங்கள் முன்னர் இருக்கிறாய். எங்களுக்கு என்ன தர வேண்டும் என்று உனக்கு தெரியும். எது சரியென்று உனக்கு படுகிறதோ? அதை செய்வாயாக. உன்னிடம் எங்களை ஒப்படைத்துவிட்டோம். நீ தருவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நீ உடனே எழுந்தருளி எங்களுக்கு அருள்புரிவாயாக என்று அடியார்கள் சார்பில் மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் வேண்டுகிறார்.

SCROLL FOR NEXT