ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்ட விழா எண்ணெய் காப்பு உற்சவத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (ஜனவரி 10) காலை 7.05 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 31-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. இதில் 2-ம் நாள் எண்ணெய் காப்பு உற்சவத்தில் ஆண்டாள் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் திருமுக்குளக் கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றுதல் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின் இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார்.
ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளில் நாளை( ஜனவரி 10) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. அதில் முதலில் ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளும், தொடர்ந்து ஆண்டாள் ரெங்கமன்னார் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் பரமபத வாசல் வழியாக எழுந்தருள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.