உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் |
நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்! ||
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்! |
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் ||
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்! |
பந்தார் விரலி, உன் மைத்துனன் பேர்பாடச் ||
செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப |
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 18)
“யானைப்படை கொண்டு பகைவர்களை வெற்றிகாணும் ஆயர்பாடித் தலைவர் நந்தகோபனின் மருமகளான நப்பின்னை பிராட்டியே! அதிகாலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அனைத்து திசைகளில் இருந்து சேவல்களின் கூவல், கொடிகள் படர்ந்த பந்தல்களில் இருந்து குயில்களின் கூவல் ஆகியவற்றை நீ கேட்கவில்லையா? கண்ணனின் புகழைப் பாட நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம்.
உறக்கத்தில் இருந்து எழுந்து, வளையல்கள் ஒலி எழுப்ப, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திறப்பாயாக! கண்ணனின் புகழ் பாட எங்களுடன் வருவாயாக” என்று ஆண்டாளின் தோழிகள் நப்பின்னையை அழைக்கின்றனர். இப்பாசுரத்தில் நந்தகோபனின் வீரம், நப்பின்னை பிராட்டியின் அழகு விளக்கப்பட்டுள்ளன.
இறைவன் படைப்பில் அனைவரும் சமம்..!
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் |
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் ||
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் |
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல ||
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர் |
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி ||
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி |
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய். ||
(திருவெம்பாவை 18)
சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும், விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் மறைந்துவிடுகின்றன. அதேபோல அண்ணாமலையாரின் திருவடியை பணிந்ததும், தேவர்களின் மணிமுடியில் உள்ள நவரத்தினங்கள் ஒளியிழந்து காணப்படுகின்றன. ஆண், பெண், அர்த்தநாரீஸ்வரர் என்று முப்பிரிவாகவும் திகழும் ஈசன், வானமாகவும், பூமியாகவும், பிற உலகங்களாகவும் திகழ்கிறார்.
கண்களுக்கு இனிய அமுதம் போன்று காட்சியருளும் அவரது திருவடிகளைப் புகழ்ந்து பாடி, குளத்தில் நீராடினால் நமக்கு பல பலன்கள் கிட்டும் என்று தோழிகள் மற்ற தோழியரை நீராட அழைக்கின்றனர். இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்பதையும், அனைத்து உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பதையும் இப்பாடல் வலியுறுத்துகிறது.