தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாட்டுக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். உச்ச நிகழ்வாக மகரவிளக்கு பூஜை ஜன.14-ம் தேதி நடைபெற உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்குப் பிறகு கடந்த 26-ம் தேதி நடை சாத்தப்பட்டது. பின்பு சந்நிதானம் முழுவதும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக இன்று (டிச.30) மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். பின்பு ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்றினார்.
தொடர்ந்து ஐயப்ப விக்கிரகத்தில் பூசப்பட்டிருந்த திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மாளிகைப்புறம் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கணபதி மற்றும் நாகராஜாவை வழிபட்டு மாளிகப்புறத்தம்மன் கோயிலை திறந்தார். இதனைத் தொடர்ந்து, தரிசனத்துக்காக பக்தர்கள்18-ம் படி வழியே ஏற அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களுக்குப் பிறகு நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனத்துக்கு வந்திருந்தனர். சபரிமலை செயல் அலுவலர் பி.முராரிபாபு, நிர்வாக அலுவலர் விஜூ வீ.நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்பு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளன. தொடர்ந்து வரும் 14-ம் தேதி வரை நெய், சந்தன அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் ஜன.14-ம் தேதி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகரபூஜை வழிபாடு நடைபெறும். அன்று மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
தொடர்ந்து 19-ம் தேதி வரை பக்தர்கள் அரச கோலத்தில் உள்ள ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். பின்பு 20-ம் தேதி பந்தள மகாராஜாவின் வம்சாவளியினருக்கு மட்டும் சிறப்பு பூஜை, தரிசன வழிபாடு நடைபெறும். அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பின்பு சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டு 2025-ம் ஆண்டுக்கான மகரபூஜை நிறைவு பெறும்.
ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் அதிகரிப்பு: மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணிக்காக திருவனந்தபுரம் காவல் எஸ்பி மதுசூதனன் தலைமை பொறுப்பேற்றுள்ளார். 10 டிஎஸ்பிகள், 33 ஆய்வாளர்கள், 96 சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1,437பேர் இக்குழுவில் உள்ளனர். தற்போது பம்பாவில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் 7-ல் இருந்து 10 ஆக அதிரிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு கவுண்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.