நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (டிச.30) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர் .
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை வடைமாலை அலங்கார பூஜை, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணியளவில் தங்கக்கவச அலங்காரத்தில் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இதையொட்டி நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்துச் சென்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரில் காலை 9 மணி முதல் இரவு வரை கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதுபோல் நகரிலும் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.