கோப்புப்படம் 
ஆன்மிகம்

வாரம்.. மாதம்.. வருடக் கடைசி என்பதால் திருமலையில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்

என்.மகேஷ்குமார்

திருமலை: வாரம், மாதம், வருடக் கடைசி என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக ஆண்டு முழுவதும் பக்தர்களின் கூட்டம் சுவாமி தரிசனத்திற்காக அலைமோதுவது வழக்கம். ஆனால் தற்போது வாரம், மாதம், வருடக்கடைசி என்பதால் வழக்கத்துக்கும் அதிகமாகவே பக்தர்கள் திருமலையில் கூடி வருகின்றனர்.

இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்படுகிறது. ஏழுமலையானை தினமும் சராசரியாக தற்போது 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் டிசம்பர் 30, 31 மற்றும் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாகும் என கருதப்படுகிறது.

இதனிடையே பொங்கல் விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் ஜனவரியில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் நினைத்ததை விட அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தினமும் ரூ.4 கோடியை தாண்டி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 22-ம் தேதி ரூ.4.12 கோடி, 23-ம் தேதி ரூ.4.15 கோடி, 24-ம் தேதி ரூ.4.23 கோடி, 25-ம் தேதி ரூ.4.14 கோடி, 26-ம் தேதி ரூ.4.18 கோடி என தொடர்ந்து உண்டியல் காணிக்கை அதிகமாகி உள்ளது. இது இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன் தினம் அதாவது 26-ம் தேதி மொத்தம் 59,564 பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். இதில் 24,905 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள வைகுண்ட காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே சுமார் 2 கி.மீ தூரம் வரை, அதாவது கிருஷ்ண தேஜா விடுதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க சுமார் 20 மணி நேரம் வரை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT