சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் தொடர் வழிபாட்டுக்கு பிறகு, நேற்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் மண்டல கால பூஜை தொடங்கியது. தினமும் அதிகாலை 3 முதல் இரவு 11 மணிவரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மண்டல பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு 420 பவுன் கொண்ட தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடைபெறும். இதற்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலின் காப்பறையில் இருந்த தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கடந்த 25-ம் தேதி மாலை பம்பையை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, சந்நிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதற்காக காலையில் நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் தொடங்கின. நண்பகல் 12.30 மணி அளவில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கியை தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அணிவித்தார். சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. மண்டல பூஜை என்பதால் நெரிசலை தவிர்க்க 60 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடலுக்கு பின்பு கோயில் நடை அடைக்கப்பட்டது.
முன்னதாக, மண்டல பூஜை தொடர் வழிபாட்டு காலங்களில் நடை அடைக்கப்பட்டாலும், சந்நிதான வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில், பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை. இரவிலேயே கோயில் வளாகத்தில் இருந்து பம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
மகரவிளக்கு பூஜை: மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். மகரவிளக்கு பூஜை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (டிச.28) நடைபெற உள்ளது. இதில் தேவசம் துறை அமைச்சர் வாசவன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அதைத் தொடர்ந்து சந்நிதானம் முழுவதும் தூய்மை பணி நடைபெற உள்ளது.