சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வெள்ளி ரத ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படியுடன் பரிவார தெய்வங்களுடன் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, ரூ.4.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விநாயகர், நவகிரகங்கள், ஆஞ்சநேயர் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி டி.கே.மோகன் உள்ளிட்டோர் கொடி ஏற்றி பிரம்மோற்சவ விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, திரவிய பூஜை, 1008 கலசங்கள் ஸ்தாபனம், ஸ்ரீபூத பலி, தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 18-ம் படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், ஐயப்ப சுவாமி வெள்ளி ரத ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, ஸ்ரீபூத பலி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இன்று (டிச.26) பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.