வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருப்பலிகளை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத் தந்தைகள் நடத்தி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பங்குத் தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.
அப்போது, பேராலய நிா்வாகம் சாா்பில் கிறிஸ்தவா்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. பின்னர், ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் சொரூபம் எடுத்துச் செல்லப்பட்டது. இதைக் காணவும், சிறப்பு திருப்பலியில் பங்கேற்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேராலய கீழ்கோயில், விண்மீன் ஆலயம், பேராலய வளாகம் என அனைத்துப் பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.