தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மண்டல பூஜை நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இன்று (டிச.25) விருந்து அளிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து மண்டல காலத்துக்கான வழிபாடுகள் தொடங்கின. நாளை (டிச.26) விழாவின் உச்ச நிகழ்வாக மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்நாளில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி இன்று (டிச.25) மதியம் 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தது. பின்பு தலைச்சுமையாக இந்த ஆபரணப் பெட்டி சந்நிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின்பு தங்க அங்கி காப்பகத்தில் வைக்கப்பட்டது. நாளை மதியம் மீண்டும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் தாலாட்டு பாடலுடன் கோயில் நடை சாத்தப்படும். இதன் மூலம் 41 நாள் தொடர் வழிபாட்டுக்குப் பிறகு இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜை நிறைவடைய உள்ளதால் சந்நிதானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தேவசம் போர்டு உறுப்பினர் ஏ. அஜிகுமார், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, நிர்வாகி அதிகாரி முராரிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.