திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் நேற்று அதிகாலை நிறைவு பெற்றதும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு மகா தீப கொப்பரை கொண்டு வரப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த டிச.1-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.
முக்கிய நிகழ்வாக கடந்த 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டன. மகா தீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையுடன் மகா தீப தரிசனம் நிறைவு பெற்றது. இதை யடுத்து, மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொப்பரை கொண்டு வரப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மகா தீபக் கொப்பரையில் உள்ள கரு மை சேகரிக்கப்பட்டு, வாசனை திரவியத்தை சேர்த்து, மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாத்தப்படும். பிறகு, பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும்.