சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சபரிமலைக்கு நடந்து சென்ற பக்தர்கள். 
ஆன்மிகம்

வனப் பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு சபரிமலையில் அரைமணி நேரத்தில் ஐயப்ப தரிசனம்

என்.கணேஷ்ராஜ்

தேனி: வனப்​ பாதை​யில் நடந்து வரும் ஐயப்ப பக்தர்​களுக்கு வழங்​கப்​பட்ட சிறப்பு சலுகை காரண​மாக, இந்த பக்தர்கள் சபரிமலையில் அரை மணி நேரத்​தில் தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்​துள்ளனர்.

சபரிமலைக்கு பாதயாத்​திரையாக வரும் ஐயப்ப பக்தர்​கள், புல்​மேடு மற்றும் எருமேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை எனப்​படும் பாரம்​பரிய வழித்​தடத்​தில்
செல்​கின்​றனர். இதில் எருமேலி வனச்சாலை​யானது, அழுதா நதியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலை​வுக்கு கடுமையான ஏற்ற இறக்​கத்​துடன் கூடிய கரடு​முரடான பாதை ஆகும். கடுமையான பனி, மழை இவற்றுடன் யானை உள்ளிட்ட விலங்​கு​களை​யும் பாது​காப்பாக கடந்து சிரமத்​துடன் பக்தர்கள் சந்நி​தானத்தை அடைகின்​றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் சந்நி​தானத்தில் மீ்ண்​டும் நீண்ட வரிசை​யில்பல மணி நேரம் காத்​திருக்​கும் நிலை இருந்​தது. எனவே, தங்களுக்கு தரிசனத்​தில் முன்னுரிமை அளிக்க வேண்​டும் என்று, இப்பாதை வழியே வரும் பக்தர்கள் பல ஆண்டு​களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்​படை​யில், கடந்த 18-ம் தேதி முதல் இந்த பக்தர்​களுக்கு சிறப்பு திட்டம் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முக்குழி​யில் நுழைவுச்​சீட்டு முத்​திரை​யிட்டு வழங்​கப்​படும். வரும் வழியான புதுக்​குறிச்சி தாவளை, செரி​யானவட்டம் ஆகிய இடங்​களி​லும் முத்​திரை குத்​தப்​படும்.

இந்த 3 முத்​திரை உள்ள நுழைவுச் சீ்ட்டுக்களை கொண்டு வரும் பக்தர்​களுக்கு மட்டும் சிறப்பு தரிசனத்​துக்காக போலீ​ஸார் அனும​திக்​கின்​றனர். இதன்​படி, வனப்​பாதை​யில் வரும் பக்தர்கள் சபரிமலை​யில் உள்ள பெரிய நடை பந்தலில் இருந்து தனிப்​பாதை வழியே 18-ம் படியேறி, ஐயப்பனை விரைவாக தரிசித்து வருகின்​றனர். வரிசை​யில் காத்​திருக்​கும் நிலை இல்லாத​தால், அதிகபட்சம் அரைமணி நேரத்​தில் தரிசனம் செய்ய முடிகிறது. இது பக்தர்கள் மத்தி​யில் பெரும் வரவேற்​பைப் பெற்றுள்​ளது.

இதுகுறித்து ஹைதரா​பாத்​தைச் சேர்ந்த கவுசிக் என்ற பக்தர் கூறுகை​யில், ‘‘12-வது ஆண்டாக பாதயாத்​திரையாக சபரிமலைக்கு நடந்து வருகிறோம். 150 பேர் கொண்ட குழு​வில், ஆங்காங்கே தங்கி சுமார் ஒன்றரை மாதங்​களில் சபரிமலை வந்துள்ளோம். வனப்​பாதை​யில் வரும் பக்தர்​களுக்கு அளித்​துள்ள இந்த சலுகை​யால், அரைமணி நேரத்​துக்கு உள்ளாகவே தரிசனத்தை முடித்து​விட்​டோம். இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எங்களுக்கு மகிழ்ச்​சியாக இருக்​கிறது’' என்றார்.

திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்​.பிரசாந்த் கூறுகை​யில், ‘‘முதல் நாளில் புல்​மேடு வழியாக 2,516 பேரும், எருமேலி பாதை வழியாக 650 பேரும் வந்​தனர். நேற்று ​முன்​தினம் புல்​மேடு வழியாக 3,016 பேரும் எருமேலி வழியாக 504 பேரும் வந்தனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு சலுகை தரிசனம் கிடைத்துள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT