ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் திருப்பாவை சேவை

என்.மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத சேவை நிகழ்ச்சியுடன் சுவாமிக்கு சேவைகள் தொடங்கும். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி, ஏழுமலையானை துயில் எழுப்புவது ஐதீகம். இந்த திருப்பாவை சேவை இன்று அதிகாலை முதல் தொடங்குகிறது. மார்கழி மாதம் நேற்று 16-ம்தேதி காலை 6.57 மணிக்கு பிறந்ததால், அதற்குள் சுப்ரபாதம் சேவை நடத்தப்பட்டது. 12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராக போற்றி புகழப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் (ஜனவரி 14-ம் தேதி வரை) பாடப்பட உள்ளது. அதன்பிறகு, ஜனவரி 15-ம் தேதி முதல் வழக்கம்போல் சுப்ரபாத சேவை தொடரும்.

மேலும், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் இரவு நடக்கும் ஏகாந்த சேவையில் போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு பதில் ஸ்ரீ கிருஷ்ணர் இடம் பெறுவார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரச்சார பரிஷத் அமைப்பு சார்பில் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள அனைத்து தேவஸ்தான கோயில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை திருப்பாவை சேவை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.

SCROLL FOR NEXT