நாகப்பட்டினம்: நாகூர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு தர்கா மினராக்களில் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நேற்று அதிகாலை நடைபெற்றது. நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரி விழா நாளை (டிச.2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது ஹாஜி உசேன் சாஹிப் தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது.
தொடர்ந்து, அதிர்வேட்டுகள் முழங்க 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பாரம்பரிய மண் தட்டில் தப்ரூக் எனப்படும் சீனி பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மும்மதங்களையும் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் டிச. 11-ம் தேதி இரவு நாகையில் இருந்து தொடங்கி 12-ம் தேதி அதிகாலை நாகூரை அடைகிறது. அங்கு பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் தர்கா நிர்வாகத்திடம் 45 கிலோ சந்தனக் கட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், அன்று 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.