திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் என்பது உலக பிரசித்தி பெற்றதாகும். மாதந்தோறும் பவுர்ணமி நாளில், மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரம் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ., தொலைவு வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி வரும் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 16-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெறுகிறது.
எனவே, வெள்ளிக்கிழமை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.